தங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா....

Posted in

தங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா....

வினா:

ஐயா, எண்ண அலைகளைப் பரப்பி நன்மை செய்விக்க முடியும் என்று கூறுகிறீர்கள். தங்களால் மழை பெய்யவைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா ? இயற்கை ஆற்றலின் நியதியை மீறி எதுவும் நம்மால் செய்ய முடியாது என்பது தங்களின் பதிலானால் மனிதமனம் முயற்சி செய்வது எல்லாம் இயற்கையை எதிர்த்து தானே ? தாங்கள் மனதைப் பற்றி கூறும் அறிவுரைகளும் இயற்கையை எதிர்த்துச் சென்று மனதை நிலை நிறுத்துவது தானே ? விளக்க வேண்டுகிறேன் ?

மகரிஷியின் விடை:

அகத்தவத்தால் மனவலிவு ஏற்பட்டு பல காரியங்களை சாதிக்க முடியுமென்றால் நீங்கள் உங்கள் மனோவலிமையால் மழை பெய்விக்க முடியுமா என்று சவால் விட்டிருக்கிறீர்கள். இயற்கையை, மெய்ப்பொருளை உணந்தவர்கள் பஞ்ச பூதங்களையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டுப்படுத்த முடியும். அந்த சாதனை அவர்கள் கருணையுள்ளத்திலே தோய்ந்து இயல்பாக இருக்கின்றது. ஆனால் ஒரு அன்பரின் சவாலுக்கு பதில் போன்று அம்மாபெருங்காரியத்தில் அந்த கையவர்கள் இறங்குவார்களா ? என்பதை ஒருவர் மிக நுணிகி நின்றே அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் சவாலில் வெற்றி பெற்று சிறு புகழ் தேடிக் கொள்வதில் அத்தகையவர்கள், அவ்வளவு கீழ் இறங்கிவிடமாட்டார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மனவலைக்கலையில் தேர்ந்த அன்பர் ஓர் இடத்தில் மழை பெய்விக்கச் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்போது என்ன சொல்வீர்கள். இது இயற்கையாக தற்செயலாக மழை பெய்தது. நீங்கள் பெய்வித்தாக எவ்வாறு நம்புவது என்று தான் சொல்வீர்கள்.

என்னைப் பொறுத்தவரை மழை பொழிவதன் காரணமும், பொய்ப்பதின் காரணமும் அறிவேன். மனிதர்களின் மனோநிலைக்கும், இயற்கையின் இயல்புக்கும் உள்ள தொடர் நிகழ்ச்சிகளில் மழை பொய்த்துபோவதும் ஒன்று. இயற்கை ஆற்றலானது எல்லாம் வல்ல ஒரு பேரியக்க நியதி. இவ்வாற்றலை காலம், தூரம், பருமன், விரைவு எனும் நான்கு கணக்கீடுகளைக் கொண்டு மனித மனத்தால் அறுதியிட்டுக் கூற முடியாது.

இயற்கையின் ஆற்றலும் அதன் ஒழுங்கமைப்பும் அவ்வப் போது ஆங்காங்கு அமையும் சூழ்நிலைக்கேற்ப எண்ண ஆற்றல் அதிர்வலைகளாகவே நிகழ்கின்றது. மனித மனத்தின் எண்ண ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. உணர்வு, இச்சை, துணிவு, கனிவு, உணர்ச்சி வயம், விடாமுயற்சி என்ற மனநிலைகளில் அழுத்தத்திற்கும் விரைவிற்கும் ஏற்ப இயற்கையாற்றலின் ஒரு சிறு பகுதியை காலம், விரைவு, பருமன், தூரம் என்ற ஒரு எல்லைக்குள் தனது விருப்பம் போல் பயனாக்கி கொள்ள முடியும்.

ஆனால் தனது விருப்பம் போல் அவ்வப்போதைய இயற்கை நிகழ்ச்சிகள், ஆற்றலை கணக்கிட முடியாமலும், தப்புக் கணக்கு போடுவதிலும் மனித எண்ணம் தோல்வியுறுகின்றது. உதாரணம் : மரம் ஒரு இயற்கையாற்றலின் பகுதி நிகழ்ச்சி. அதனை அதன் தன்மையை, அதன் ஆற்றலை உணரும் அளவில் மனிதன் பயனாக்கிக் கொள்கிறான். ஆனால் கையை மூடிக் கொண்டு மரம் மீது ஓங்கி ஒரு குத்து விட்டால் என்ன ஆகும் ? கைவலி அல்லது சிறுகாயம் உண்டாகலாம்.

இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்கு பகையாகிப் பொதுவான சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொரு வரும் பிறருக்கு துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவது அதற்கு துணிந்து செயல் புரிவதும் பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கிறேன். அதன் விளைவு என்னவாகும் ? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன.

மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்தும் பிறர்க்குத் துன்பமளிக்காமல் இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டும் வாழ்ந்தால் கால மழை ஒத்த அளவில் உலகில் பெய்யும். போர், வறுமை, பஞ்சம் இவையின்றி மக்கள் செழிப்போடு வாழ்வார்கள்.

நாம் இப்போது காணும் இப்பஞ்ச நிலைமையில் மழையில்லா வறட்சி நிலையில் மக்கள் அனைவரும் கூடி மனித இனம் அடையும் துன்பங்களை நினைத்து, கருணை உள்ளத்தோடு எல்லோரும் வளவாழ்வு பெற மழை பொழிய வேண்டும், என அழுத்தமாக நினைத்தால் கட்டாயம் மழை பொழியும். ஒரு மனிதன் மட்டும் அவன் எண்ண ஆற்றலைப் பரப்பி மழை பொழியச் செய்ய நினைத்தால், செய்தால் அது இயற்கை ஆற்றலின் நியதிக்கே முரண்பாடாக அமையும். உதாரணமாக ஒரு மனிதன் உணவு செரியாமை, பேதி என்னும் நிலையில் மருத்துவரிடம் சென்று மருந்து பெற்று உண்ணுகிறான். அம்மருந்து சரியாக பலன் தரவேண்டுமெனில் நோயாளி உணவில் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். அதன்படி மருந்து உண்டுவிட்டு மேலும் உணவை மிகுதியாகவே உண்டால் என்ன விளையும், நோய் போகாது மிகுந்து போகலாம். இதனால் மருந்துக்கு வலுவில்லை என்று கொள்ள முடியாது. அது போதிய பலன் விளைக்கத் தக்கதும் ஒத்ததுமான சூழ்நிலைகள் அமையவில்லை என்று தான் பொருள்.

மழையை பெய்விக்கும் ஆற்றல் மனித எண்ண ஆற்றலில் உண்டு. அந்த உயர்வில் மனவளம் பெற்றவர்கள் அதனை சித்தாகவோ , சில மக்களிடம் ஒரு புகழ் விரும்பியோ பயன்படுத்தும் அளவிற்கு கீழே இறங்கிவிட மாட்டார்கள். மனிதனிடம் அறிவை உயர்த்தி அவன் ஆற்றலும் அற உணர்வும் மேலோங்கிச் செய்வதால் தனிமனிதனும், சமுதாயமும் நிரந்தரமாகப் பல வளங்களையும் பெற்று வாழும். இயற்கை ஒழுங்கமைப்பை ஒட்டி மனவளம் பெற்றோர் அந்தத்துறையில் இன்று உலகுக்குத் தொண்டாற்றி வருகின்றார்கள். அவர்கள் கருணையின் ஊற்று மிகும் போது மழையும் பெய்யலாம்

மகரிஷியின் சிந்தனைகள்

Posted in

                        ஒரு மயிலைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த மயிலின் உருவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு வரும்போது அந்தக் கண்களில் மிகச்சிறிய உருவமாக பிரதிபலிக்கிறது. இப்படிச் சுருக்கம் பெற்ற மயிலின் உருவமானது எப்போது மூளை செல்களில் மோதுகிறதோ அப்போது அந்த மூளைச் செல்கள் அதைப் பதிவு செய்து கொள்கின்றன. எப்படி ஒரு ஒலியானது பதிவு நாடாவில் பதிவு செய்யப்படுகிறதோ அதே போல மயிலின் உருவமானது அந்த மயிலைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அடங்கிய அழுத்த அலையாகச் சுருங்கிப் புள்ளி வடிவில் பதிவாகிறது.

மூளைச் செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானாலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலின் காரணமாக இருப்பாக வைக்கப்படுகிறது. மயிலைப் பார்த்து உணர்ந்த அனுபவத்திற்கு ஏற்பப் பார்ப்பவருடைய கருமையமானது தன்மை பெறுகிறது. பின்னர் எப்பொழுதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே அலை வரிசை ஏற்படும் போது, மூளைச் செல்கள் ஏற்கனவே அந்த அலை வரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும். அப்படி விரித்துக் காட்டப்படும்போது பார்ப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் உணர்வின்பாற்பட்ட அலைகளும், எண்ண அலைகளும், பரு உடலில் ஏற்படும் அனுபவங்களால் விளையும் அலைகளும் கருமையத்துக்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன.

விலங்கினப் பதிவு
ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமமடைந்துள்ளது. இதனால், மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை :-

1. பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல்.

2. மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல்.

3. மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன் முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன்
இன்பத்துக்காகவோ பறித்தல்.

என்பதாகும். இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகா. அவற்றிற்கு ஒத்தவை; ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால், உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கிச் சிக்கலின்றி வாழ்வோம்.

வாழ்க்கையின் சிற்பி
இன்று மக்களிடை “இவரைக் கெடுத்துவிட வேண்டும்” என்று அவரும் “அவரைக் கெடுத்துவிட வேண்டும்” என்று இவரும் இன்னும் பலப்பல விதத்திலும் தீய எண்ணம் மலிவாகக் காணப்படுகிறது. ஆனால், அந்த எண்ணங்கள் செயல்பட விடாமல் அவரவர்களும் எதிர் நடவடிக்கை மூலம் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். செயலுக்கு வர முடியாத இந்தத் தீய எண்ணங்களின் தொகுதி என்ன ஆகும்? செயலாகாத வரை அவற்றுக்கு நிறைவும் வராதே! அதுதான் இன்றெல்லாம் நாம் காணும் இயற்கை உற்பாதங்களாக – அதாவது புயல், வெள்ளம் என உருவெடுத்து எல்லோருக்கும் துன்பமாக மலர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், இயற்கையே தான் எண்ணமாக வந்திருக்கிறது. எண்ணமும் இயற்கையின் ஒரு கூறுதான்.

ஒளி ஒன்றுதான். அது ஆற்றிய செயல்களும், விளைவுகளும் பலப்பல. அதுபோல் எண்ணமும் ஒன்றுதான். என்றாலும் அது ஆற்றும் செயலும் விளைவுகளும் கணக்கிட முடியாதன. எண்ணத்தின் விளைவறியாது எண்ணி எண்ணி அது விளைவாகிச் செயலாக மலரும்போது அவற்றைத் தாங்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அவனே வலையும் விரித்து, அதற்குள் அவனே சிக்கிக் கொள்கிறான். அவரவர் வாழ்க்கையின் சிற்பி அவரவர் எண்ணங்களே.

மறைபொருட்களை உணரும் நிலை

பிரம்மஞானம் உலகில் மக்கள் அனைவருக்கும் பரவாமல் தடைப்பட்டதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. அதை உணர்ந்து கொண்டு, தக்க முறையில் அந்தத் தடைகளைக் களைய வேண்டும். தடைக்குக் காரணங்களாவன:
அனைத்தியக்க அருட்பேராற்றலான இறைநிலை – பிரம்மம்,
அதிலிருந்து தோன்றிய விண்,
விண் சுழலிலிருந்து தோன்றிய காந்தம்,
காந்தத் தன்மாற்றங்களாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம்
– இவற்றின் கடைசி அலை இயக்கமாகிய மனம்.
இவையனைத்தும் மறை பொருட்கள். இவை இல்லையென்று மறுத்துக் கூற முடியாது. இவ்வாறு உள்ளன என்று புலனறிவுக்கு எடுத்துக் காட்டவும் முடியாது. ஆயினும், இவற்றை அறிவதற்காகவே ஆறாவது அறிவு எனும் சிந்தனையாற்றல் மனிதனிடம் அமைந்திருக்கிறது. ஐந்து புலன்கள் மூலம் தோற்றப் பொருட்களை உணர்வது ஐயறிவு.
புலன்கள் மூலம் உணரப் பெறும் பொருட்களுக்கு மூலமான மனம், காந்தம், விண், மெய்ப்பொருள் இவற்றை உணரக்கூடிய அறிவு தான் ஆறாவது அறிவு. புலன்களால் பொருட்களை உணரும்போது மன அலைச்சுழல் மிகவும் விரைவாக இயங்குகிறது. அந்த விரைவு நிலையில் மறைபொருட்கள் விளங்கா. மன அலைச்சுழல் விரைவை அகத்தவச் சாதனையால் குறைத்து, அந்த நுண்ணிய நிலையில் தான் மறைபொருட்களை உணர முடியும்.
மெளனம்

நாம் கருத்தொடராகப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.
ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களைக் கணக்கெடுப்பது போல எல்லோருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுங்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளன நோன்பு அவசியம்.
இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும், கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டத்தால் ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மெளன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்மத் தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.

அலையின் தன்மை

நமது உடலுக்குள்ளாக இயங்கக் கூடிய உயிராற்றல், அலையாக ஜீவகாந்த சக்தியின் மூலம் எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும், அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மாற்றம் பெறும். நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்பொழுதுமே, கோள்களிடமிருந்தும், பொருட்களிடமிந்தும், மக்களிடமிருந்தும் அலைகள் வந்து கொண்டேயிருக்கும். அந்த அலைகள் சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம்.
பாதகம் என்பது வெளியிலிருந்து வரக்கூடிய ஆற்றல். நம்மிடையே இருக்கிற ஆற்றல் மீது அதிக அழுத்தம் தருமானால், அதைத் தாங்க முடியாதபோது ஒரு துன்பத்திற்குரியதாக மாறுகிறது. அதைத் தாங்கும் போது அதுவே இன்பமாக மாறுகிறது. நமக்கு எப்பொழுதுமே கோள்களிலிருந்து வரக்கூடிய அலையினாலும், பொருட்களிலே இருந்து வரக் கூடிய அலையினாலும், நாம் செய்கின்ற செயல்களிலேயிருந்து வரக் கூடிய அலையினாலும், அதிகமாகப் பாதிக்கப்படாத ஒரு Steadiness தாங்கும் சக்தி (resistance power) அவசியம்.
அந்த ஆற்றலை ஏற்படுத்திக் கொள்வதற்காக நாம், நமது உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் இந்த நான்கையும் சேர்த்து ஒவ்வொரு பெளதீகப் பிரிவோடும் இணைக்க வேண்டும். உதாரணமாக, நிலம் என்ற மண்ணை எடுத்துக் கொண்டு அதையே நினைந்து, நினைந்து, நினைந்து மண்ணிலேயிருக்கக்கூடிய ஆற்றலுக்கும், நமக்கும் உறவை ஏற்படுத்தி, எப்போதும் நாம் தூங்கும்போதும், விழித்துக் கொண்டிருக்கும் போதும், எங்கே சென்றாலும் மண்ணிலிருக்கக் கூடிய ஆற்றல் நமக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டும். நன்மை தான் செய்ய வேண்டும் என்று சங்கற்பம் (Auto Suggestion) செய்து கொள்ள வேண்டும்.


ஆன்மீகக் கல்வி

ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகி வருகிறது. பல மைல்கள் தொலைவு வரையில் மழையே இல்லை. எப்படித் தண்ணீர் வருகிறது? இதன் காரணமறிந்தால் எவ்வாறு ஒரு நாட்டில் திடீரெனப் போர் உண்டாகிறது என்பதை அறியலாம். எங்கோ பல மைல் தொலைவில் நல்ல மழை பெய்திருக்கிறது. இது ஒரு மேடான பூமி. மழைநீர் கடலை நோக்கி ஓடுகிறது. அந்த நீரைத் தான், வறண்ட ஆற்றில் பெரும் வெள்ளமாகக் காண்கிறோம். இதே போல உலக மக்கள் வாழ்வில் கணக்கிட முடியாத துன்பங்கள் நிலவுகின்றன.
எல்லாத் துன்பங்களுக்கும் காரணம், மனிதன் மதிப்பை, மனிதன் அறியாமல் செய்யும் தவறுகள் தான். எப்படி? அறநெறி வழியே வாழ மக்களுக்கு முறையான ‘ஆன்மீகக் கல்வி‘யும் இல்லை; பயிற்சியும் இல்லை. பெரும்பாலான மக்கள் இதனால் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் நான்கிலே அளவு மீறிய ஆசையைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். உண்மையில் மனிதருக்குப் பொருளும், புலன் இன்பமும் வாழ்வில் இன்றியமையாதவை.
ஆயினும், அவற்றைப் பெறத் தனது நேர்மையான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பின்றியே பொருளும், இன்பமும் பெறவேண்டுமென்ற வேட்பே, அதிகாரத்திலும், புகழிலும் அடங்கியுள்ளது. இதனால் தான், உலகம் முழுவதும் மனிதகுலம் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் என்ற நான்கில் ஆசையைப் பெருக்கிக் கொண்டு என்றும், எதிலும் நிறைவு பெற முடியாமல், இன்னும் வேண்டும் என்ற முடிவில்லாத, அமைதியில்லாத மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இறையுணர்வாகிய “பிரம்மஞானம்” பெற்றால் தான், மேலே சொல்லப்பட்ட பேராசைகள் நான்கும் மறைந்து ‘மனநிறைவு‘ உண்டாகும்.
கருவில் திரு உடையார்
ஆத்மதாகம் கொண்ட மனிதன் இந்த நினைப்பிலே உருகி நிற்கும் போது, அந்த நினைப்பானது குருவை அவன் முன் கொண்டு வரும். குரு வருவதற்கு வேறு மார்க்கமேதும் கிடையாது.
ஓர் ஏற்புத் தன்மை இருந்தால் குருதானே இங்கே வருவார். எனவே, குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உயரட்டும். தானாகவே அவனுடைய எண்ணம் உயர்நிலையில் பக்குவப்படட்டும். குரு தானாக வருவார்.
மனிதனுடைய எண்ணம் என்பது என்ன? அது பிரம்மத்தினுடைய சாயை தானே? இயக்கம் தானே எண்ணமாக, அறிவாக இருக்கிறது? உணர்ந்த நிலையில் அறிவாகவும், மயக்க நிலையில் மனமாகவும் அதுவே குறிப்பிடப்படுகிறது. அது தானாக அமர்ந்த நிலையில் பிரம்மமாக உள்ளது. பக்குவப்பட்டவன் நினைத்தால் குருவர வேண்டியதுதானே? (Fraction demands and Totality Supplies).
நம் முன்னோர்கள் செய்த தவப்பயனே குண்டலினி யோகம்
அவ்வாறு குரு வரவேண்டியதைத் தடுப்பது எது? ஏற்கனவே எண்ணியிருந்த எண்ணங்களால் உருவான ஒரு மேடு மத்தியிலே தடுக்கிறது. இதைக் கணித்து உணர்ந்து கொண்டு நல்லதிலேயே மனதை நிலைக்கச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களுடைய நல்ல கர்மத்தின் விளைவாகத் தான் நீங்கள் இந்த மனவளக்கலையை ஏற்று இருக்க முடியும். அது நீங்கள் நேரடியாகச் செய்த தவப்பயனாக இருக்கலாம்; அல்லது உங்களது பெற்றோர்களுடைய தவப்பயனால் உங்களுக்கு இந்த உணர்வு நிலை கிட்டியிருக்கலாம். பெற்றோர்கள் மூலமாகக் கிட்டும் போது அதை நமது தமிழகத்துப் பெரியவர்கள் “கருவில் திரு உடையார்” என்று ஒரே சொற்றொடரில் வர்ணித்தார்கள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன